100 அடி தூரத்தை 5 நொடிகளில் கடக்க திணறி ‘பிரேக் ‘ அடித்து நின்றேன் சிக்னலில். நொடிகள் மெதுவாய் குறைந்தன. கணத்த கை ஒன்று என் தோளை தொட திரும்பி பார்த்தேன் ‘தம்பி’ என்றவரை. உணர்ச்சியற்ற அவர் முகத்தின் தளர்ச்சி சொன்னது அவர் முதியவர் என்று. வயது 50 இருக்கலாம். வலது கையில் பொருத்தப்பட்ட ஊன்றுகோல் சொன்னது அவர் கால் ஊனமென்று. காலை பார்த்தேன். கட்டு கட்டப்பட்டிருந்தது. ஊனமில்லை, காலில் அடிப்பட்டவர் என்றுணர்ந்தேன் .
அவர் பேச்சு ஏதோ புலம்பல் போலிருக்கவே மனநோயாளி என்று கூட நினைத்தேன். அவர் உடையும் அதை உறுதி செய்வது போலவே இருந்தது. அவர் புலம்பலில் சில வார்த்தைகள் மட்டும் காதில் விழுந்தன. ‘பாரதிதாசன் காலேஜ்’, ‘பஸ் ஸ்டாப்’, ‘லாஸ்பேட்’, ‘எறிக்கவா?’
அப்போது தான் எனக்கு விளங்கியது அவர் என்னிடம் ‘லிஃப்ட்’ கேட்கிறார் என்று. ஒரு நொடி யுத்தம் ஒன்று மூளையில் நடந்தது.
‘லிஃப்ட் கொடுக்கலாமா? வேணாமா?’
‘இவர நம்பலாமா? வேணாமா?’
அவர் முதுமையும், ஊன்றுகோலும் ‘வாங்க.. விட்டுட்றேன்..’ என்ற பதிலை என்னிடமிருந்து பெற்றுக்கொண்டது.
சிக்னலில் நொடிகள் குறைந்தன. 5,4,3… கிளம்பிவிட்டேன். என்றோ படித்த துண்டுச்செய்தியெல்லாம் எனக்கு ஞாபகம் வந்தன.
‘லிஃப்ட் கொடுத்த வாலிபனை தங்கச்சங்கிலியால் கழுத்தறுத்த முதியவர்.’
‘மாற்றுத்திறனாளி வேடத்தில் உலவும் திருடர்கள்.’
நல்லவேளை நான் தங்கம் அணிவதில்லை. எனினும், சற்று பயந்திருந்தேன். காரணம், என் ‘பர்ஸ்’ சற்று கனத்திருந்தது. வழியில் அடிக்கடி பர்ஸை தொட்டுப்பார்த்து கொண்டேன். அது அப்படியே தான் இருந்தது. அவர் பேசாமலே வந்து கொண்டிருந்தார்.
நாங்கள் பாரதிதாசன் கல்லூரியை நெருங்க, ‘தம்பி, எழைமாரியம்மன் கோயில் கிட்ட விட்டுட்றியா? இங்க ரொம்ப கூட்டமா இருக்கு..’ என்றார். காலில் அடிப்பட்டவர் என்கிற தோற்றம் என்னிடமிருந்து ‘சரி’ என்ற பதில் பெற்றுக்கொண்டது. ஆனால், என் சந்தேகப்பார்வை வேகமாய் படரத்துவங்கியது. மீண்டும் அந்த துண்டுச்செய்திகள் கண் முன் வந்து போயின. என்றோ சிறுவயதில் அப்பா சொன்ன, ‘தெரியாதவங்களுக்கு லிஃப்ட் கொடுக்காத..’ என்ற வசனம் அப்போது எனக்கு கேட்டது. மறுபடியும் பர்ஸை தொட்டுப்பார்த்து கொண்டேன். பர்ஸ் அப்படியே தான் இருந்தது. அவரும் மௌனமாகவே வந்து கொண்டிருந்தார். நம்பிக்கை லேசாய் என் பார்வையில் துளிர் விட்டது.
அவர் சொன்ன அந்த இடத்தை அடைந்தோம். வண்டியை நிறுத்தும் முன்னரே வந்து விழுந்தன நன்றிகள். நெஞ்சம் லேசாய் குறுகுறுத்தது. கடைசி ‘தேங்க்ஸ் தம்பி’-யுடன் அவர் இறங்கி சென்றுவிட்டார்.
கால் தாங்கிய ஊன்றுகோலும், ஊன்றுகோல் தாங்கிய கைகளோடும் அவர் நகர்ந்த போது,என்னை நானே வெறுத்துக்கொண்டிருந்தேன். நிஜமும், போலியும் கண்டுணர முடியாத அளவுக்கு இரட்டை பிறவிகளாய் வளர்த்தெடுக்கப்பட்ட சமூகத்தில் வளர்கிறவன் நான். அதே சமூகம் என் கண்களுக்கும் கடிவாளம் கட்டிவிட்டிருப்பதை கண்டு வியப்படைய ஏதுமில்லை. எனினும், கடிவாளத்தை தகர்த்தெறிவது என் கைகளில் தான் உள்ளது.
சற்று குறுகுறுத்த மனதோடு விலகினேன். சற்று தூரம் தள்ளி போய் நின்று கடைசியாய் ஒரு முறை பர்ஸை திறந்து பார்த்துக்கொண்டேன். பணம் சரியாய் தான் இருந்தது. சென்றுவிட்டேன்.
***
Comments