தமிழகத்தின் ஒரு சிறப்பம்சமான வீரவிளையாட்டுகளில் ஒன்றான பம்பரம் ஒரு சிறுவர்-வீரவிளையாட்டு எனலாம். ஒரு அடிக்கு சனல் கயிறு கிடைக்காமல், வீட்டின் மூலை முடுக்கெல்லாம் அலசி அப்போதும் கிடைக்காமல், இடுப்பில் சுற்றியிருக்கும் அரைஞான்கொடி அறுபட்டு, பம்பரத்திடம் பிடிபட்டு, குறி பார்த்து தரையில் துளை போட்டு, சுற்றவிடப்பட்ட பம்பரத்தை சுற்றி உள்ள அந்த சிறுவர் கூட்டம், என்னவோ தாங்கள் பூமியையே சுற்றவிட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் போல தோற்றம் தருவார்கள்.
நான் பேசப்போவது அந்த சிறுவர்கள் பற்றி அல்ல, ஒரு பம்பரம் பற்றி. அதை சுற்றவிட்டவர் பற்றி. சுழற்றி எறியப்பட்டு பல கோடி ஆண்டுகள் கடந்தும் நில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் அந்த பம்பரத்தை நாம் ‘கிரகம்’ அல்லது ‘கோள்’ என்போம். ஒரு சிறுவன் எறிந்த பம்பரம் நில்லாமல் 1 நிமிடம் அல்லது அதிகபட்சம் 2 நிமிடம் சுழன்று சோர்ந்துவிடும். அத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன் சுற்றிவிடபட்ட ஒரு கிரகம் இன்றும் கூட சோராமல் சுழன்றுகொண்டிருக்கிறது எனில் சுற்றவிட்டவன் கடிகாரத்தில் இன்னும் அந்த 1 நிமிடம் முடியவில்லையா? அப்படியெனில் சிறுவனின் கடிகாரத்தின் நேரமும் கிரகத்தை சுற்றிவிட்டவன் கடிகாரத்தின் நேரமும் ஒன்றி நகர்வதில்லை (not synchronous). இரண்டாம் நேரம் ஸ்லோ மோஷனில் (slow motion) நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி ஸ்லோ மோஷனில் கிரகங்களை சுழலவிட்டு கலைப்பாறிக்கொண்டு அதை ரசித்துக்கொண்டிருக்கும் அவனை நாம் பல பேர்கள் சொல்லி கூறுவதுண்டு: கடவுள், சாமி, ஆண்டவன், பகவான், இன்னும் பல.
கிரகங்களை ஸ்லோ மோஷனில் சுற்றிக்கொண்டிருக்கும் பம்பரங்கள் என்று கருதும் இதை நாம் ‘பம்பர விதி’ என்று வைத்துக்கொள்வோம். இந்த பம்பர விதியின் அடிப்படையில் மனிதர்களை மூன்றாக பிரிக்கலாம்:
1. கிரகங்களை சுற்றவிட்டவனுக்கு மனித உருவம் தந்து, பல மதங்களின் பேரில் அவனை கடவுள் என்று வணங்கி வரும் பக்தர்கள்.
2. தன் உருவத்தில் ஒரு சிலைக்கு வடிவம் தந்து, அதற்கு ஒரு கோவில் கட்டி வழிபடுபவர்கள் மூடர்கள் என்பது போல ஒதுங்கி நிற்கும் நாத்திகர்கள்.
3. இரு தரப்பையும் ஒத்துக்கொள்கிறேன், அதை நிரூபித்துக்காட்டுங்கள் என்று கூறும் பகுத்தறிவாளர்கள். (நாத்திகனும் ஒரு வகையில் பகுத்தறிவாளன் தான்.)
தன் அறிவிற்கும் அப்பாற்பட்ட விஷயம் தான் ஆண்மீகம் என்று நினைத்து சிந்திக்க மறுக்கும் மனிதர்கள் தங்கள் கலைத்திறமையினால் உருவாக்கியது தான் கடவுள். ஓவியன் ஒரு உருவம் வரைய, சிற்பி அதற்கொரு வடிவம் கொடுக்க, எழுத்தாளன் கதைகளால் புராணங்கள் உருவாக்க, கலை போதை கொண்ட மக்கள் அதை ரசித்து, வியந்து, உணர்ந்து, நம்பிக்கை கொண்டு, பின்பற்றி உருவானது தான் மதங்கள். இப்படி ஆன்மீகத்தை பல கலைகளால் பெற்றெடுக்கப்பட்ட பிள்ளையாக பார்ப்பவர்கள் தான் பகுத்தறிவாளர்கள். அனால், அதே பகுத்தறிவு கண்டறிந்த இன்னொரு விஷயம் தான் ஆன்மீகத்தின் மேல் அவர்களுக்கு மரியாதை உண்டாக்குகிறது. மதங்களும், கடவுள்களும் பல இருந்தாலும் அனைத்தின் நோக்கமும் ஒன்றாக இருந்தது தான் அது. அன்பு!!!
சக மனிதனை நேசிக்கவே எல்லா மதங்களும் கற்பிக்கின்றன. புராணங்கள் கதைகளாய் இருந்தாலும் அது மனிதனை கட்டுப்படுத்தி வழிநடத்தி வந்திருக்கிறது இத்தனை காலம் வரை. பகுத்தறிபவனும் சக மனிதனை நேசிக்கிறான், தன்னை தானே வழி நடத்தி கொள்கிறான். பக்தனுக்கும், இவனுக்கும் உள்ள வித்தியாசம்: பக்தனின் நம்பிக்கை கலைகள் வழி வந்தது, பகுத்தறிபவனின் நம்பிக்கை அறிவியல் வழி வருவது.
ஆக, கலை-அறிவியலின் முரண்பாட்டினால் உண்டாவது தான் ஆத்திகமும், நாத்திகமும் எனலாம் அல்லவா?
——–***——–
Comments