FILMS & CREATIVES
16 items found for ""
- பாய்மரம்
பாய்மரம் மேலே மீன்களெல்லாம் தூண்டில் போட்டுக் காத்திருக்கும். ஆற்றினுள் நீந்தும் உயிர்களெல்லாம் இறையாய் மாறும் நேரம் இது. உயிர்களின் மத்தியில் உடலாக நீயும் நானும் நீந்துகிறோம். தூண்டிலை மறந்து திரிவோமா? ஆற்றினை கடந்து பிழைப்போமா?
- பெண்பால்
முழுமதியை கடந்து செல்லும் மேகமெல்லாம் சிவந்தன. இளமதியை தீண்டிச்சென்ற மேகலையும் சிவந்தாள். ரோஜாக்களை வருடும் சேலைக்குத்தான் எத்தனை ஆனந்தம். ரோஜாவின் மேல் உறங்கும் சீதைக்குத்தான் எத்தனை பேரின்பம். வீணை மீட்டிய விரல்கள் கொஞ்சக் கொஞ்ச வீணாவும் கீதைக்கு இசைந்தாள். தேனை சொட்டிய நாவும் கெஞ்சக் கெஞ்ச தேனும் கோதைக்கு இனிந்தாள். பெண்பாலில் வெண்பாக்கள் பாடுகையில் பாவை பெண் நாவை உணர்ந்தாள். பெண்பாலை பெண்பாலே கோருகையில் வெண்பாவும் செண்பாவை மணந்தாள். – செ
- மதம் பிடித்த மனிதன்
மதங்கள் ஜெயிக்கும் இடங்களில் மனிதம் தோற்றுப் போகிறது. மனிதம் ஜெயிக்கும் இடங்களில் மதங்கள் தோற்றுப் போவதில்லை. மதங்கள் விபத்து. தெய்வம் மரணம். மதங்கள் குடை. தெய்வம் மழை. மதங்கள் கதறல். தெய்வம் நிசப்தம். மதமே மனமாய் மாறுவது மதங்கள் சொல்வதில்லை. மனிதம் மதமாய் மாறுவதே மதங்கள் சொல்லுவது. மதங்கள் அறியாமை. தெய்வம் மர்மம். மதங்கள் எழுத்துப்பிழை. தெய்வம் கவிதை. மதங்கள் முட்பாதை. தெய்வம் இலக்கு. #கவத #tamilpoem #tamil #God #தமழகவத #கடவள
- மழைக்காடு
சிட்டெறும்பு சேத்துக்குள்ள சிக்கி முக்கி தவிக்குதப்பா! கட்டுமரம் பொளந்த படி ஆத்துக்குள்ள மெதக்குதப்பா! காட்டருவி கண்ணசந்து சொட்டு சொட்டா கொட்டுதப்பா! அடிச்சு போன கூரையெல்லாம் கரை கடந்து கெடக்குதப்பா! செத்துப் போக மறுத்ததெல்லாம் மாரடிச்சு நிக்குதப்பா! உசுர விட்ட ஒடம்பு எல்லாம் மண்ணில் பொதைய தவிக்குதப்பா! மனுசன் கண்ணு அத்தனையும் மழை மழையா அழுகுதப்பா! பாம்பு ரெண்டு பின்னிக்கிட்டு எழுந்து நின்னு ஆடுதப்பா! #கவத #tamilpoem #tamil #மழ #தமழகவத
- மின்மினி
இருளோடு பயணித்து உடல் மட்டும் தொலைத்திடவா? மழையோடு நனைந்த படி உயிர் கூட கரைத்திடவா? நிலவை தேடும் ராத்திரியில் நட்சத்திரங்களும் இல்லையடி. உஷ்ணம் தேடும் வேளையிலே தீயும் பற்றவில்லையடி. காட்டோடு காற்றாக கலந்தபடி இருக்கையிலே நீ மட்டும் மின்மினியாய் பறந்த படி இருக்கின்றாய். இருட்டிலும் ஒளிரும் உன் உடலில் என் உயிர் பிடித்து அடைத்திடவா? ஒளி வீசி உன் சிறகு படபடக்க நானும் உன்னோடு பறந்திடவா? #கவத #tamil #tamilpoem
- காதருவி
அவ காதோரம் வழிஞ்சோடும் ஒரு சொட்டு அருவியில ஒரு நாளு நனைஞ்சிட தான் ஒரு ஜென்மம் காத்திருந்தேன் கழுத்தோட அணை போட்டு வழியாம தடுத்திருந்தா ஒரு ஊர தணிச்சிருக்கும் நெலமெல்லாம் செழிச்சிருக்கும் இப்போ நெஞ்சோட நிக்காம பள்ளம் வர பாஞ்சோட ஆறா தான் மாறிடுச்சே குளிச்சாட கூப்புடுதே காட்டாறு கரையோரம் சலனப்பட்டு நிக்கையில நீந்த கூட கத்துக்கல மூழ்குனாலும் தப்பே இல்ல குதிக்காத ஒரு நிமிஷம் அண்ணாந்து பாத்திருந்தேன் இன்னுமொரு சொட்டருவி வழிஞ்சோட காதோரம் காத்திருந்தேன் காதோரமும் கழுத்தோரமும் நெஞ்சோரமும் குழியோரமும் பேய் காத்தா அலஞ்சாடுற மனசெல்லாம் பெருங்கொழப்பம் காதோரமே விழுந்து கெடப்போமா? ஆத்தோட விழுந்து துடிப்போமா? இல்ல முடிவொன்னும் எடுக்காம அடுத்த ஜென்மம் வர தவிப்போமா? – சுகுமார் செ
- அவர்களும் மனிதர்கள் தான்!
இயற்கை எவ்வளவு அழகியலை கொண்டதோ அதே அளவிற்கு இரக்கமற்றதும் கூட. இயற்கையை கடிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் மனிதர்களால் தான் ஏற்படுகிறது என்பதும் உண்மை. மனிதர்களை பூமியை ஆளுபவர்களாய் படைத்த அதே இயற்கை சிலருக்கு சில குறைகளையும் தந்தது தான் அதை இரக்கமற்றதாய் காண்பிக்கிறது. மனிதர்கள் மற்ற ஜீவராசிகளுக்கு இழைக்கும் அநியாயங்கள் ஒரு புறமிருக்க அவர்கள் அவர்களுக்குள்ளேயே இழைத்துக்கொள்ளும் அநியாயங்களும் அதிகம். நாம் நமக்கே இழைத்துக்கொள்ளும் அநியாயங்களில் ஒன்று: ஊனம் எனும் சொல் தவறானது என்று கூறி அதற்கு ‘மாற்றுத்திறன்’ என்று பெயர் சூட்டி, அந்த மாற்றத்தையே காரணமாக்கி சிலரை ஒதுக்குவது தான். அநியாயங்களில் மற்றொன்று: ஊனம் என்பது உடல்பாகங்களின் குறைபாடுகள் மட்டுமே என்பது. மரபணுக்களில், ஹார்மோன்களில் ஏற்படும் குறைபாடுகள் எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாதா?! குறையோடு பிறந்த எவரும் குறைகளை சரி செய்து சகஜமாய் வாழ நினைப்பது நியாயமானது தான் அல்லவா? அப்படி இருக்க, ஆண் உடம்பில் பெண்மை உணர்பவரும், பெண் உடம்பில் ஆண்மை உணர்பவரும் இயற்கை தனக்கு தந்த குறைகளை சரி செய்து முழுமை பெற்று வாழ நினைப்பதும் சரி தான் அல்லவா? திருநர்கள் இயற்கைக்கு புறம்பானவர்கள் அல்ல. இயற்கையின் குறைகளை நிவர்த்தி செய்து வாழும் மனிதர்களே. அவர்களுக்கும் cisgender மனிதர்கள் போலவே பாலீர்ப்பும், காதலும், காமமும், திருமண வாழ்வும், தாய்/தந்தை உணர்வும், கல்வியும், வேலைவாய்ப்பும், சக மனித உபசரிப்பும் என அனைத்தும் தேவையாய் இருக்கின்றன. அவர்களுக்கு இதெயெல்லாம் கொடுக்க மறந்த அல்லது மறுத்த அதே சமூகம் தான் திருநங்கைகளை பாலியல் தொழிலுக்கும், பிச்சை கேட்பதற்கும் மட்டுமே தகுந்தவர்களாக அடையாளம் காட்டுகிறது. அதே சமூகம் தான் அவர்களை பல கேலிப்பெயர்களை சொல்லி அழைக்கிறது; அவர்களை பார்த்ததும், ஒதுங்கியும் ஓடியும் ஒளிகிறது; அவர்களின் முகம் பார்த்து சிரிக்க மறுக்கிறது. அப்படியே அவர்களை அணுகி சிரித்து பேசும் பலரும் தன் பாலியல் இச்சைகளுக்காவே அதை செய்கின்றனர் என்பதும் ஒரு கசப்பான உண்மை. திருநர்கள் என்றால் ஆண் உடம்பில் பெண்ணாய் பிறந்த திருநங்கையர் மட்டுமல்ல. பெண் உடலில் ஆணாய் பிறந்த திருநம்பிகளும் தான். திருநங்கைகளை காண்பது போல திருநம்பிகளை நான் பொதுவெளியில் சுலபமா கண்டிருக்க முடியாது. காரணம், இன்றும் பல பெண்களுக்கான முடிவுகள் அவர்களால் எடுக்கப்படுவதில்லை என்பது தான். குடும்பத்தின் கௌரவம் பெண்களை சார்ந்தே உள்ளது என நினைக்கும் சமூகத்தினால் தான். ஆண்களால் தான் பெண்ணாய் உணர்கிறேன் என்று சொல்ல முடிந்த அளவிற்கு ஒரு பெண்ணால் தான் ஆணாய் உணர்கிறேன் என்று சொல்ல முடிவதில்லை. அவர்களின் குரல் பல நேரம் நம் காதுகளில் விழுவதும் இல்லை. இன்று சில திருநம்பிகளை பற்றி உலகம் அறியத்தொடங்கி இருக்கிறது என்றால் அதற்கு அவர்கள் துணிவு தான் காரணம். அந்த துணிவை அவர்களுக்கு தருவது ஓயாமல் ஒலிக்கும் பெண்ணிய குரல்கள் தான். இவர்களெல்லாம் மாற்றுபாலினம் கொண்ட மனிதர்கள் என்றால், மனிதர்களில் மாற்றுப்பாலீர்ப்பு (Gay and lesbian) கொண்டவர்களும் உண்டு. அவர்கள் உங்களில், என்னில், மனிதராகப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் கலந்துள்ளனர் என்பது அறிவியல் நம்பும் நிஜம். ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால், எந்த ஒரு மனிதரும் 100 சதவிகிதம் எதிர்பாலீர்ப்பு கொண்டவர் அல்ல என்பது ( No person is 100 percent straight). ஆனால் அதை நாம் ஒரு மனநோயாக மாற்றி அதை சினிமாக்களிலும், நண்பர்கள் அரட்டைகளிலும் ஒரு கேலிப்பொருளாக மாற்றி இருக்கிறோம். பாலீர்ப்பு என்பது ஒரு தனிமனிதரின் விருப்பு வெறுப்புகள் சம்பந்தப்பட்டது. அதை காரணம் காட்டி ஒருவரை சிறுமை படுத்துவது எவருக்கும் இல்லாத உரிமை ஆகும். மாற்றுப்பாலினம் அல்லது மாற்றுப்பாலீர்ப்பு கொண்ட சக மனிதர்களை நாம் மறந்ததும், மறுத்ததும் நம்மை குற்ற உணர்வு கொள்ள வைக்கவில்லை என்றால் நாமும் ஐம்புலன்களில் எதையோ இழந்த ஊனப்பிறவி என்றே அர்த்தம். LGBTQ மனிதர்களின் அடையாளமாய் Pride Month என்று கொண்டாடப்படும் இந்த ஜூன் மாதத்தில் , அதை நாம் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களையும் சக மனிதராய் உணரவாவது முயற்சிப்போம்.
- வேண்டாத கனவு
வேண்டுமென்ற போதெல்லாம் வந்திடாத தூக்கம் தான் வேண்டாத கனவெல்லாம் கொடுத்துக் கொடுத்துக் கொள்ளுதடி. தீராத அழுகையெல்லாம் தீர்த்துவிட்ட நிமிடத்தில் ஊற்றாக ஒரு பிம்பம் கண்ணுள்ளே வளருதடி. ஒளியற்ற இரவொன்றில் நிழல் தேடி பேசுகையில் இறந்தாலும் என்னோடு இருப்பதாய் சொன்னதடி.
- வீழ்ச்சி
உயரப் பறக்கத்தான் கீழ் நோக்கி விழுகின்றேன். விழுவது வீழ்ச்சியோ பறப்பது புரட்சியோ வீழ்ந்து பார்ப்போமே! பறந்தால் தான் பறப்போமே!
- நானும் ஓர் குழந்தை
ஒ ரு கணம் அழுதிட மறு கணம் சிரித்திட குழந்தையாய் மாறவே தினமும் முயற்சித்தேன். கதைகள் எழுதுகிறேன் காலத்தில் பயணித்து கருப்பையில் நீந்திவிட. ஓவியங்கள் வரைகின்றேன் என் சிரிப்பை சிறைப்படுத்தி என் அழுகை சிறைப்படுத்தி அணு அணுவாய் ரசித்துவிட. பாட்டொன்று படிக்கின்றேன் எனக்கே நான் தாலாட்டி தொட்டில் மேல் ஆடிவிட. வேறென்ன நான் செய்ய மழலை போல் மாறிவிட? இப்போதும் அழுகை வர சுற்றம் பார்த்து சிரிக்கின்றேன் அப்படியே நடிக்கின்றேன். —-xxx––
- “நெருங்கி வா…”
( விமானப்படை அதிகாரிகளுக்கான விருந்தொன்றில் ஓர் இளைஞன்… ) மேகங்கள் கிழித்தெறிந்து வானத்தில் சீறியவன் இங்கு பெண்மேக கூட்டம் ஒன்றில் நகராமல் நிற்கின்றேன். மேகங்கள் எனை உரச அதை உணர உடல் மறுக்க விழி வழியே நகர்கின்றேன். தூரத்தில் நீ மேகங்கள் கலைத்தெறிந்து சூரியன் போல் ஒளி வீச உன் ஃபோட்டான் அணுக்கள் எல்லாம் என் உடலை சூடேற்ற குளிர் தேடி உடல் அலைய உயிர் மட்டும் ஒளி தேட உனை நெருங்கி வருகின்றேன். கை நீட்டி அழைக்கின்றேன்: “என்னோடு வா.” “ஆடவா கூடவா?”, சிரிப்போடு முறைக்கின்றாய். “இன்றைக்கு ஆட வா…” கை கோர்த்து நகர்கின்றோம். உடலும் உடலும் அசைந்தாட காற்றில் இசை போல கலந்தாட இதழில் ஈரமுடன் நீ கண்ணில் தாகமுடன் நான். “நெருங்கி வா…” என்கின்றாய். “மணந்து கொள்” என்கின்றேன். இசை நின்று அமைதி வர உன் கண்ணில் வெட்கம் வர “இருக்கட்டும். நெருங்கி வா…”, நீயே அணைக்கின்றாய், உன் மார்பை என் மார்பில். இணைந்துவிட்டோம், மணக்கவில்லை. மணப்போமா, மறப்போமா? இணைந்துவிட்டோம், தெரியவில்லை. —xxx— பி.கு: ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தின் முன்னோட்டத்தால் ஈர்க்கபட்ட படைப்பு இது.
- ஜொய்ங்’னு ரெண்டு புறா
நே த்து ஆபீஸ் முடிஞ்சு ஹாஸ்டல் வந்துட்டு இருந்தேன். வழியெல்லாம் பளிச்சினு பல பெண்கள். “பௌர்ணமி நிலா!!!”, அப்டினு ஈஈஈஈஈ’னு இளிச்சிட்டே கொஞ்சம் வானத்த பாத்தேன். கொய்யால.. கொள்ள அழகு. அந்த பிறை நிலா, மராத்தி பெண்களோட மூக்குத்தி போல ஒரு வெள்ள வளையமா. அந்த போதைலயே ஹாஸ்டல் போய் சேந்தேன். பல பௌர்ணமியும், ஒரு பிறையும் தந்த போதைல மட்டையாகி நான் கெடக்க, பீர் குடிச்சவனுக்கு மோர் ஊத்துற கதையா எனக்கு ஒரு நாதாரி நண்பன் போன் பண்ணி தொலைக்க, ரூமுக்குள்ள சிக்னல் இல்லாம நான் மாடிக்கு போனேன். நண்பன் பேசுறான் பேசுறான் பேசிக்கிட்டே இருக்கான். அவன் குரல் போர் அடிச்சு போய் நான் மறுபடியும் வானத்த பாக்க ஆரம்பிச்சேன். நட்சத்திரமெல்லாம் ஒவ்வொன்னா என்ன பாத்து கண் அடிச்சுது. அதுவாச்சு அடிக்குதே. “மகிழ்ச்சி”-னு திரும்ப நான் கண் அடிக்க, கண் அடிச்ச நட்சத்திரம் ரெண்டு மெல்ல நகந்துது. அங்க பக்கத்துல இருந்த ஒரு அண்ணன கூப்ட்டு, “அண்ணே அங்க பாருங்க… ரெண்டு நட்சத்திரம்… பக்கத்துக்கு பக்கத்துல..” “ஜொய்ங்’னு பறந்துச்சா?” “புறா இல்லண்ணே.. நட்சத்திரம். நகருது பாருங்க” “ஏரோப்ளேன்’டா அது” “ஏரோப்ளேன்’ல இப்டிலாம் இவ்ளோ லைட் எரியாது’ணே” அவர் திரும்ப அத பாத்தாரு. டிஸ்கோ பாள் போல கலர் கலரா லைட் எரிஞ்சுட்டு ரொம்ப பொறுமையா நகந்துட்டு இருந்துச்சு. “ஒரு வேல பலூனா இருக்குமோ?”-னு கேட்டார். “பொறுமையா நகர்ரத பாத்தா பலூன்’னு சொல்லலாம். பட் பலூன்’ல ஏன் லைட் எரியுது. அதுவும் இத்தன லைட்டு.” “ஒரு வேல பாகிஸ்தான் வேவு பாக்ரானோ?!” “ஒரு வேல பறக்கும் தட்டா இருக்குமோ?” கொஞ்சம் கொடூரமா என்ன மொரச்சிட்டு, “பறக்கும் தட்டு தானே தம்பி? கீழ போய் உன் தட்ட பறக்க விட்றேன். பாத்துக்கோ.”-னு கீழ எறங்கி போய்ட்டார். நான் அந்த ரெண்டையே பாத்துட்டு இருந்தேன். கிட்ட நெருங்கிட்டே வந்தது மெல்ல பின்னாடி போக ஆரம்பிச்சிது. கொஞ்ச கொஞ்சமா சைஸ் கொறஞ்சி ஒரு புள்ளியா மாறி, நட்சத்திர அளவுக்கு வந்ததும் ஒரு முற கண்ணடிச்சிட்டு என் கண்ண விட்டு மறஞ்சிது. அது மறஞ்ச பிறகும் ரொம்ப நேரம் அந்த வானத்தையே பாத்துட்டு இருந்தேன். அந்த ரெண்டும் திரும்ப வராதா’னு ஏங்குனேன். பறக்கும் தட்டு உண்மையா இருக்கனும், அத நானும் என் கண்ணால பாக்கணும்’னு துடிச்சேன். ஒரு அஞ்சு நிமிஷம் வந்து போன அந்த ரெண்டும் என்ன ரொம்ப நேரம் வெறும் வானத்த பாக்க வெச்சிடுச்சு. அந்த ரெண்டும் பாகிஸ்தானோட பலூனோ, பறக்கும் தட்டோ இல்லனா ஜொய்ங்’னு பரந்த புறாவோ, எதுவா இருந்தாலும் இந்த நாள என் காலண்டர்’ல குறிக்க வெச்சிட்டு போய்டுச்சு. “திரும்ப வாயேன் ப்ளீஸ்”-னு மனசுலே சொல்லிக்கிட்டு மனசு கேக்காம கீழ எறங்கி போனேன். [பி.கு: பறக்கும் தட்டு’னா வேற்று கிரக ஜந்துக்கள் வந்து போற விமானம். மேல தெரிஞ்சிக்க இத அழுத்துங்க: https://en.wikipedia.org/wiki/Flying_saucer ]